Saturday, January 21, 2012

வெற்றிக்கு திட்டமிடுங்கள்..! அதற்கு உதவி செய்ய முன்வாருங்கள்!!.



அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் இந்திய கல்வி முறையில், முக்கியமாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள மாதங்கள் மிகவும் அதிமிக முக்கியம் வாய்ந்த மாதங்களாகும். இந்த மாதங்களில்தான் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான அரசு பொதுதேர்வுகளும், அதை அடுத்து நடைபெறும்  நுழைவு தேர்வுகளும் மாணவ மாணவிகளின் உயர்கல்வி பற்றிய வழிகாட்டுதலுக்கு மிக இன்றியமையாததாகும். அதேவேளையில் நம் சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த தேர்வுகளின் முடிவில்தான், கல்வியில் இருந்து விலகி வெளிநாட்டு கனவுகளில் மிதக்கும் தருனங்களாகவும் இருக்கின்றது. அல்லது கல்வியை இத்துடன் முடிக்கும் எண்ணத்தில் அவர்களின் சூழல் அமைந்து விடுகின்றது. 


உயர்கல்வியில் தங்களின் கவனத்தை செலுத்தாமலும், அதை அடைவதற்கான வழிமுறைகளை அறியாமலும், மேலும் அவர்களை வழிநடத்த போதிய அனுபவமிக்க நெறியாளர்கள், வழிகாட்டிகள் இல்லாமையும் இதில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. பொருளாதார உதவியை பொறுத்தவரையில் பல இடங்களில் கொட்டிக்கிடக்கின்றது என்றுதான் கூறவேண்டியுள்ளது. கல்வி கடன் வழங்கவும், கல்வி உதவித்தொகைகள் வழங்கவும் எண்ணற்ற அறக்கட்டளைகளும், உதவியாளர்களும் தாராளமாக உதவி செய்ய முன்வருகின்றனர். 
ஆனால் அதை கூட நம் சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் சரிவர பயன்படுத்தி கொள்வதுமில்லை.! ஒருசில கல்வி வழிகாட்டி மையங்களும், குறிப்பிட்டு எண்ணக்கூடிய அளவில் கல்வி சிந்தனையாளர்களும் இந்த பொறுப்பை தங்களின் கடமையாக எடுத்து செயல்படுத்தி சமுதாய மாணவ மாணவிகளை உயர்கல்வியின் பக்கம் திருப்பி வருகின்றனர். 

மாணவ மாணவிகள் இதுபோன்ற சேவைகள், எங்கு யாரால் எப்படி வழங்கப்படுகின்றது என்பதை சற்று சிரத்தை எடுத்து பெறவேண்டும். அதற்கு பெற்றோர்களும் ஊரில் உள்ள சமுதாய அக்கறை கொண்ட சகோதரர்களும் உதவ முன்வர வேண்டும். ஏனெனில் இந்த மாதங்கள்தான் பயிரிடும் மாதங்களாகும். சரிவர பயிரிடவில்லை எனில் பின் விளைச்சல் இல்லை என்று குறைகூறி பயனில்லை.! 


ஆகவே என் அருமை சகோதர சகோதரிகளே, உங்கள் ஊர்களில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவ முன்வாருங்கள்!. அவர்களை உயர்கல்வியின் பக்கம் திசை திருப்ப உங்களால் ஆன உதவிகளை செய்ய முன்வாருங்கள்!.  கல்வியில் முன்னேறிய சமுதாயத்தை மட்டுமே வாழ்க்கையிலும், ஆட்சி அதிகாரத்திலும் முன்னேறிய சமுதாயமாக மாற்றிக்காட்ட முடியும்!. 


அந்த வகையில் நம் இணையதளத்தில் சில பதிவுகளை கல்விக்காக,  குறிப்பாக உயர்கல்விக்காக பல ஆக்கங்களை தேடிப்பிடித்து வழங்கி வருகின்றோம்..! எனவே வாருங்கள்!!.  இதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்!!. உங்களுக்கும் தெரிந்த பதிவுகளை அறியத்தாருங்கள்!!!. இன்ஷாஅல்லாஹ் குறைந்தபட்சம் இந்த வருடம் ஒரே ஒரு முஸ்லிம் மாணவ மாணவியையாவது  IAS ஆகவோ அல்லது IPS ஆகவோ மாற்றிக்காட்டுவோம்..! நம் சகோதர சகோதரிகளை  கல்வியில் முன்னேற்றி, நம் வருங்கால சந்ததிகளை முன்னேறிய சமுதாயமாக மாற்ற  அல்லாஹ்விடம் துவா செய்தவனாகவும், கீழ்கண்ட பதிவு மாணவ மாணவிகளுக்கு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதையும் இங்கே அறியத்தருகின்றேன்.
                                                                    அதிரை  முஜீப்.

பொதுத் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மாணவர்கள் திட்டமிட்டுப் படிக்க வேண்டிய நேரம் இது.

ஏற்கெனவே உங்கள் பள்ளியிலும், வீட்டிலும் நீங்கள் படித்த பாடங்களைப் பலமுறை படித்துப் பார்த்திருப்பீர்கள். ரிவிஷன் செய்திருப்பீர்கள். இந்த மூன்று மாத காலத்தையும் திட்டமிட்டுப் படிப்பதற்குச் செலவிடுங்கள்.

முதல் மதிப்பெண்தான் உங்கள் லட்சியமா? அப்படியானால், உங்கள் படிப்பு முறையில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முழு மதிப்பெண் பெற வேண்டும் என்றால், எல்லாப் பாடங்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும். படிக்கும்போதே, முக்கிய தகவல்களைக் கோடிட்டு வைத்துக்கொண்டு, தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளலாம். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கென தனியாக ஒரு நோட்டுப் போட்டு வைத்துக் கொண்டால் தேர்வு நேரத்தில் புரட்டிப் பார்ப்பது எளிதாக இருக்கும்.

பாடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மறைந்திருக்கும் நுணுக்கமான விஷயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். பழைய கேள்வித்தாள்கள், வகுப்புத் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு, அடிக்கடி எழுதிப் பாருங்கள். இந்தப் பாடம் தேவையில்லை, அந்தப் பாடத்திலிருந்து கேள்விகள் வராது என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து ஒதுக்காதீர்கள்.

கணக்குப் பாடத்தைப் பொருத்தவரை, சூத்திரங்களை தனியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கடைசி நேரத் திருப்புதலின்போது மிகவும் உபயோகமாக இருக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அல்லது வாரம் ஒரு முறையாவது இந்த சூத்திரங்களை மனப்பாடமாக யாரிடமாவது ஒப்பித்து சரிபார்க்கவும். 
கட்டுரைகளை மனப்பாடம் செய்யும்போதே, துணை தலைப்புகளை நன்கு நினைவில் பதித்துக் கொள்ளவும். தேர்வு நேரத்தில் கட்டுரை முழுவதையும் படிக்க முடியாமல் போகலாம். துணைத் தலைப்புகளை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனால்போதும், உள்ளே இருக்கும் சாராம்சம் நினைவுக்கு வந்துவிடும்.

தேர்வு காலத்தில் நேர நிர்வாகம் முக்கியம். தேர்வு தேதிகள் தெரிந்தவுடன், மாணவர்கள் ஒரு டைம் டேபிள் போட்டுக்கொண்டு எந்தெந்தப் பாடத்துக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று பிரித்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு எத்தனை சப்ஜெக்ட்டுகள் இருக்கின்றனவோ அந்த சப்ஜெக்ட்டுகளின் எண்ணிக்கையை மனதில் கொண்டு, இந்த மூன்று மாத காலத்தை சரிசமமாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இந்த நாளில் இந்த சப்ஜெக்ட்டைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை உடனே படித்துவிடுங்கள். நாளை படிக்கலாம் என்று தள்ளிப் போடவேண்டாம். முயற்சியுடன் தன்னம்பிக்கையோடு படியுங்கள். வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment