Saturday, August 4, 2012

ரமளானின் பெயரால்….

அகிலத்திற்கு வழிகாட்டியான  திருமறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனித மாதமாகிய ரமளானில் நாம் அனைவரும் வீற்றிருக்கின்றோம். இப்புனித  மாதத்தில் அதிகமான முஸ்லிம்கள் மற்றய காலங்களில் அவர்கள் கடைப்பிடிக்கும் அனாச்சாரங்களைக் கூட ஓரளவு குறைத்து விட்டு இறை திருப்திக்காக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வருவது வழமையானதே! இருந்த போதிலும் இஸ்லாத்தில் வன்மையாகத் தடுக்கப்பட்ட நிறைய மூட நம்பிக்கைகளையும், அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத புதிய வணக்கங்களையும் நாள் தவறாமல் கடைப்பிடித்தொழுகும் மோசமான சூழ்நிலையையும் இன்று நாம் கானுகின்றோம்.
ரமளானை சிறப்பிப்போம் எனும் பெயரில் நடைபெரும் சில பித்அத்துக்களை இக்கட்டுரை ஆராய்கின்றது.
1)  நிய்யத்தை வாயால் மொழிதல்: ரமளான் காலம் வந்தால் ஊடகங்களிலும், பள்ளிவாயல்களிலும், சில வர்த்தக விளம்பரங்களிலும் ‘நவய்து ஸவ்மகதின்’ எனும் நபிகளார் ஓதாத புதிய துஆவை மக்களுக்குச் சொல்லிக்கொடுத்து வருகின்றனர். இப்பிராத்தனைக்கு இஸ்லாத்தில் எள்முனையளவும் ஆதாரம் இல்லை. அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் இல்லாத இந்த துஆவையே இன்று மார்க்க அறிஞர்கள்(?) தங்களது பயான்களில் வலியுருத்தி வரும் துர்ப்பாக்கியத்தை நாம் கண்டுவருகின்றோம். அல்லாஹ்வுடைய துதருக்குத் தெரியாத இந்த நிய்யத்து இவர்களுக்கு எப்படித் தெரிந்ததோ எமக்குத் தெரியாது.
2)  ரமளானில் பள்ளிவாயல்கள் அலங்கரிக்கப்படுதல்: அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் தங்களுடைய வாழ்வில் ரமளானை அடைந்திருந்தும் தங்களது பள்ளிவாயலை ‘அலங்கார விளக்குகளைக்’ கொண்டு அலங்கரித்து விழாக்கோலம் பூண்டதாக எவ்வித நம்பகமான சான்றும் கிடையாது. அவ்வாறு இருப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். வெறுமனே சடங்குக்காக பள்ளிவாயலை அலங்கரித்து விட்டு ஸுன்னாக்களை அலட்சியம் செய்யும் எத்தனையோ பள்ளி நிருவாகிகளையும், ஆலிம்களையும் நாம் பார்க்கின்றோம். இவர்கள் இஸ்லாமியக் கற்கையில் நுணிப்புல் கூட மேயாமல் அல்லாஹ்வின் அடிமைகளாக மனிதர்களை வழிநடாத்த முற்பட்டிருப்பது மறுமை நாளுக்குரிய அடையாளங்களில் ஒன்றாகும்.
3)  விஷேட நாட்களில் தௌபாவை மக்களுக்கு ஆலிம்கள் சொல்லிக்கொடுத்தல்: மனிதன் தவறு செய்பவன். தவறை அல்லாஹ்விடம் முறையிடும் போது அத்தவறை மன்னிக்கும் தயாளம் கொண்டவன் நமது இரட்சகன். மனிதன் தவறு செய்தால் அதனை எப்படி இறைவனிடம் முறையிட்டு பாவமனிப்புக் கோரவேண்டுமென்பது நபிகளாரின் வாழ்வில் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அம்முறையை இன்று எமது மார்க்க அறிஞர்கள் போதிப்பதற்கு மாற்றமாக ரமளானில் விஷேட நாட்களாக சில நாட்களை அவர்களாத்  தீர்மானித்துக் கொண்டு அந்நாட்களில் ‘தௌபா சொல்லிக்n காடுக்கின்றோம்’ எனும் பெயரில் பள்ளிகளில் விளக்குகளை அணைத்து விட்டு இருளில் பாவமன்னிப்பைக் கூட்டாகக் கேட்பதை இன்று கண்கூடாகக் கானுகின்றோம்.
இந்நடைமுறைக்கு எவ்விதமான ஆதாரங்களும் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களில் இல்லை. போலியான ஆதாரங்கள் கூட இல்லாத இந்நடைமுறையை அவசியம் உலமாக்கள் விட்டொழிக்க வேண்டும்.
4)  ஹிஸ்பு மஜ்லிஸ்: ரமளான் மாதம் வந்துவிட்டால் அல்குர்ஆனை தமாம் செய்கின்றோம் எனும் பெயரைச் சூட்டிக்கொண்டு பல்வேறு பித்அத்துக்களை இன்று மக்கள் புரிந்து வருகின்றனர். இந்தியாவில் வாழ்ந்த ஒருவரால் கண்டுபிடித்து முஸ்லிம்களுக்குள் புகுத்தப்பட்ட புதிய ஒரு துஆவான ‘துஆஉல் கத்ம்’ எனும் பித்அத்தை இன்று பள்ளிகள் அல்லாஹ்வுக்கு சிறிதும் அச்சமில்லாமல் அரங்கேற்றி வரும் அவலத்தைப் பற்றி என்ன கூறுவது?
5)   மஃரிப் தொழுகைக்குப் பின் பள்ளிகளில் ஸலவாத் மாலை பாடுதல்:
இயற்றியவரின் பெயர் கூடத் தெரியாமலேயே இந்த ஸலவாத்து மாலையை எம்மவர்கள் ரமளானில் ஓதி வருகின்றனர். அல்லாஹ்வின் கொள்கைக்கு செய்யப்படும் பகிரங்க அநியாயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த பித்அத்களை பொருப்பு வாய்ந்த நிறுவனமென தன்னைத் தானே கூறிக்கொள்ளும் நமது ஜம்இய்யதுல் உலமாவும் கண்டித்ததாகத் தெரியவில்லை. சத்தியத்திற்கு முட்டுக் கட்டை போடுவதில் இவர்கள் எடுக்கும் முயற்சியை அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் எச்சரித்த இந்த பித்அத்துக்களுக்கு எடுத்தாலும் அல்லாஹ்விடத்தில் கூலியை நிச்சயம் பெறமுடியுமல்லவா?
(எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து மார்க்க அறிஞர்களுக்கும் சத்தியத்தை ஒளிவு, மறைவின்றி எடுத்துக் கூறும் மனோநிலையை வழங்குவானாக! நம் அனைவர்களையும் பித்அத்துக்களை விட்டும் காப்பாற்றுவானாக!)

No comments:

Post a Comment