Sunday, August 5, 2012

தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

‘பிலாலே! தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம் மன நிம்மதி பெறுகின்றோம்’ (அபூதாவுத்). “எனக்கு கண்குளிர்ச்சி தொழுகையில் தான் உள்ளது” (நஸாஈ). இது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதரின் கூற்றுகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதியும், கண்குளிர்ச்சியும் இருக்க முடியும் என்பதை இக்கூற்றுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இன்றைய நமது தொழுகையின் நிலையை கொஞ்சம் மீழ் பரிசீலனை செய்து பார்ப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் கடமைபட்டிருக்கின்றோம். அவைகள் நமக்கு சுமைகளாக மாறிவட்டனவா? அல்லது அதன் மூலம் உண்மையில் மன நிம்மதியையும், கண்குளிர்ச்சியையும் தான் பெற்றுக்கொண்டிருக்கின்றோமா?
தொழுகையாளிகளே! உங்களுக்காக எத்தனை எத்தனை நற்பாக்கியங்கள் காத்திருக்கின்றன. தொழுகையை நிறைவேற்றும் உங்களுக்கு மாத்திரம் தான் இந்த என்னற்ற நற்பாக்கியங்கள். தொழுகையை பாழ்படுத்தும் பாவிகளுக்கு அல்ல!
தொழுகையாளிகளுக்கு வெற்றி உறுதி என்ற சுபச்செய்தி:
‘ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்”. (அல்முஃமினூன் 23: 1,2).
மன உறுதியுடன் இருப்பவர்கள் தொழுகையாளிகள் என்ற சுபச்செய்தி:
“நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான். ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானானல் (அது பிறருக்கும்கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான். தொழுகையாளிகளைத் தவிர (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்”. (அல்மஆரிஜ் 70: 19-23).
தொழுகையை ஏனைய அனைத்து வணக்கங்களை விடவும் சிறப்பிற்குரியது என்ற நற்செய்தி:
‘அல்லாஹ்வின் தூதிரடம் நற்கருமங்களில் மிகச் சிறந்தது எது? என கேட்கப்பட்ட போது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது என பதிலளித்தார்கள்’. (முஸ்லிம்).
அடியான் அகிலங்களின் இரட்சகனுடன் உரையாடுகின்ற இடம் தொழுகை என்ற நன்மாராயம்:
‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் போது தனது ரப்புடன் உரையாடுகின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (புஹாரி).
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தொழும்போது தம் இறைவனுடன் உரையாடுகிறார். எனவே, தமக்கு முன்னாலோ, வலப்புறமாகவோ எச்சில் துப்பவேண்டாம். எனினும் இடதுபுறமாக தம் இடது பாதத்தின் அடியில் துப்பட்டும். (புஹாரி).
தொழுகையில் அடியான் கேட்டதெல்லாம் அவனுக்குண்டு என்ற நற்செய்தி:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- எவர் தான் தொழுகின்ற தொழுகையில் உம்முல் குர்ஆனை (பாத்திஹா) ஒதவில்லையோ அவரது தொழுகை பூரணமற்றதாகும், பூரணமற்றதாகும், பூரணமற்றதாகும் என நபிகளார் சொன்னதாக அவர் கூறிய வேளை அவர்களிடம் அபூ ஹுரைராவே! நாம் இமாமுக்குப் பின்னால் இருக்கின்ற போது (எப்படி நடந்து கொள்வது?)எனக் கேட்கப்பட்டது. அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள்உனது மனதுக்குள் இமாம் மௌனமாயிருக்கும் வேளைகளில் ஓதிக் கொள்வாயாக! ஏனெனில் நபியவர்கள் அல்லாஹ் ( ஹதீஸ் குத்ஸியில் ) சொன்னதாகக் கூறினார்கள்.
”தொழுகையை எனக்கும் எனது அடியானுக்குமிடையில் இரண்டாக வகுத்து வைத்துள்ளளேன். எனது அடியான் கேட்பது எதுவானாலும் அதை அவனுக்கு வளங்குவேன். (அடியான்) புகழ்யாவும் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்விற்கே! எனக்கூறினால் எனது அடியான் என்னை புகழ்ந்துள்ளான் என அல்லாஹ் கூறுவான். (அவன்) அல்லாஹ் அருளாளன் அன்புடையோன் எனக்கூறினால் எனது அடியான் என்னை துதித்துள்ளான் என அல்லாஹ் கூறுவான். இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதி என அடியான் கூறினால் என்னை என் அடியான் கீர்த்தியாக்கிவிட்டான் அல்லது அவனது காரியத்தை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என அல்லாஹ் கூறுவான். (யாஅல்லாஹ்) உன்னையே வணங்குகின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம். என அடியான் கூறினால் இது எனக்கும் எனது அடியானுக்கும் இடையிலுள்ளது. என் அடியான் கேட்பவைகளை நான் கொடுக்க தயாராகவுள்ளேன் என அல்லாஹ் கூறுவான். அடியான் நேரான வழியைக் காட்டுவாயாக! அதை நீ எவர்கள் மீது அருள்புரிந்தாயோ அவர்களின் வழி. எவர்களின்மீது நீ கோபங்கொண்டாயோ அவர்களின் வழியுமில்லை. வழிதவறியோர் வழியுமில்லை. என அடியான் கூறினால் இது எனது அடியானுடன் சம்பந்தப்பட்டது. எனது அடியான் கேட்டவைகள் அவனுக்குண்டு என அல்லாஹ் கூறுவான். (முஸ்லிம்).
அடியான் அல்லாஹ்விற்கு மிக நெறுக்கமாக இருக்கின்றான் என்ற நற்செய்தி:
‘ஒரு அடியான் தனது ரப்புக்கு மிக நெறுக்கமாக இருக்கும் சந்தர்பம் ஸுஜுதாகும், எனவே அதில் பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).
தொழுகை இஸ்லாத்தின் தூன் என்ற சுபச்செய்தி:
‘செயல்களின் அடிப்படை இஸ்லாம், அதன் தூன் தொழுகை’ என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (திர்மிதி).
தொழுகை பேரொளி என்ற நன்மாராயம்:
‘தொழுகை பேரொளி’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம், திர்மிதி).
தொழுகை நயவஞ்சத்தன்மையிலிருந்து பாதுகாக்கும் என்ற சுபச்செய்தி:
‘நயவஞ்சகர்களுக்கு பஃஜ்ர், இஷா தொழுகையை போன்று சிறமமான வேறு எந்தத் தொழுகையும் இல்லை. அந்த இரு தொழுகைகளுக்கு கிடைக்கும் நற்கூலிகளை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்த நிலையிலாவது வந்து அதில் கலந்துகொள்வார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).
இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை என்ற சுபச்செய்தி:
‘எவர் இஷா தொழுகையை கூட்டாக நிறைவேற்றுவாரோ அவர் இரவின் ஒரு பகுதியையும், அவர் பஃஜ்ர் தொழுகையையும் கூட்டாக நிறைவேற்றும்போது முழு இரவும் நின்று வணங்கிய நன்மையை பெற்றுக்கொள்கின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
தொழுகை நரக நெறுப்பிலிருந்து பாதுகாக்கும் என்ற நன்மாரயம்:
‘சூரிய உதயத்திற்கு முன்னும், சூரிய மறைவிற்கு முன்னும் தொழுகையை நிறைவேற்றும் எவரையும நரகம் தீண்டாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).
இந்த ஹதீஸ் குறிப்பிடுவது: பஃஜ்ருத் தொழுகையும், அஸர் தொழுகையுமாகும்.
தொழுகையில் ஸுஜுதின் போது நெற்றிபட்ட இடம் நரக நெறுப்பு தீண்டாது என்ற நற்செய்தி:
‘…….நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதி கூறியவர்களில், தான் கருணை காட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். நரகத்திலிருக்கும் அவர்களை அவர்களது ஸஜ்தாவின் அடையாளங்களை வைத்து வானவர்கள் இனம் கண்டு கொள்வார்கள். மனிதனி(ன் நெற்றியி)ல் உள்ள ஸஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப்பகுதிகளை நரகம் தீண்டுகிறது. ஸஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆவே, அவர்கள் அங்கமெல்லாம் கருத்து விட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அப்போது அவர்கள் மீது உயிர்நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் உழுநிலத்தில் விதைப்பயிர் முளைத்தெழுவதைப்போல் (புதுப்பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள்……”. (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி, ஆதராம்: முஸ்லிம்).
தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களில் இருந்து தடுக்கும் என்ற சுபசோபனம்:
‘நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும், தீமையையும் விட்டும் தடுக்கும்’. (அல் அன்கபூத் 29: 45).
தொழுகை நீங்கள் அல்லாஹ்விடம் உதவி பெறுவதற்கு உள்ள சிறந்த ஊடகம் என்ற நன்மாரயாம்:
‘நீங்கள் பொறுமையைக்கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்’ (அல்பகரா 2: 45).
‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக்கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்’. (அல்பகரா 2: 153).
தனியாக நிறைவேற்றப்படும் தொழுகையை விட கூட்டாக நிறைவேற்றப்படும் தொழுகைக்கு கிடைக்கும் சுபசோபனம்:
‘தனித்துத் தொழுவதை விட கூட்டாக தொழுகையை நிறைவேற்றுவது இருபத்தேழு மடங்கு நன்மையை உங்களுக்கு பெறுக்கித்தரும்’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முத்தபஃகுன் அலைஹி).
‘தொழுகையாளிக்கு வானவர்கள் அல்லாஹ்விடம் அருள் வேண்டி பிரார்த்திக்கின்றனர் என்ற நன்மாராயம்:
‘உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் இடத்தில் வுழூ முறிந்துவிடாமல் அமர்ந்திருக்கும் காலமெல்லாம், வானவர்கள் அவருக்காக அல்லாஹ்விடம் யா அல்லாஹ்! அவரது பாவங்களை மன்னிப்பாயாக! யா அல்லாஹ் அவருக்கு அருள் புரிவாயாக! என்று பிரார்த்தித்துக்கொண்டிருப்பர்’ என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).
தொழுகையின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நன்மாரயம்:
ஒருவர் தொழுகைக்காக நல்ல முறையில் வுழூச் செய்து, கடமையான தொழுகையை மக்களுடன் மஸ்ஜிதில் கூட்டாக நிறைவேற்றினால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
‘உங்களில் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் ஒரு ஆறு பெறுக்கெடுத்து ஓடுகின்றது, அவர் அதில் ஒரு நாளைக்கு ஐந்து தடவை குளிக்கின்றார் அவரது உடளில் அழுக்குகள் ஏதும் தங்கி இருக்குமா? என அல்லாஹ்வின் தூதர் தனது தோழர்களிடம் கேட்டபோது, அவர்கள் தங்கியிருக்காது என பதிலளித்தனர். இதே போன்று தான் ஐவேலை தொழுகையும் பாவங்கள் அனைத்தையும் கழுவி விடும்’ என கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).
தொழுகையாளிக்கு சுவர்க்கத்தில் உயர் பதவிகள் கிடைக்குமென்ற நன்மாராயம்:
‘எவர் மஸ்ஜிதுக்கு எட்டுகளை வைத்துச் செல்கின்றாரோ (அல்லது மஸ்ஜிதுக்கு போய் திரும்புகின்றாரோ) அவர் செல்லும் பேதும், திரும்பும் போதும் வைக்கின்ற ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்கத்தில் அவரது பதவிகள் உயர்தப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).
தொழுகையாளியின் ஒவ்வொரு எட்டுக்கும் பாவங்கள மன்னிக்கப்படும், பதவிகள் உயரும் என்ற சுபச்செய்தி:
‘ஒருவர் தனது வீட்டிலிருந்து வுழூச் செய்து, அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் ஏதாவது ஒரு மஸ்ஜிதுக்கு கடமையான தொழுகையை நிறைவேற்றும் என்னத்தில் எட்டுகளை எடுத்து வைப்பாரானால், அவர் வைக்கும் ஒரு எட்டுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும், மற்ற எட்டுக்கு அவரது பதவிகள் (சுவர்கத்தில்) உயரும்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).
தொழுகைக்கு நேரகாலத்துடன் செல்பவர்களுக்கு கிடைக்கும் நன்மாராயம்:
‘மக்கள் பாங்கின் மற்றும் முன் வரிசையின் சிறப்பை அறிந்துகொள்வார்களானால், சீட்டுக் குழுக்கி பார்பதன் மூலமே தவிர அந்த சந்தர்பத்தை மற்றவர்களுக்கு வழங்கமாட்டார்கள், தொழுகை;கு நேரகாலத்துடன் வருவதன் சிறப்பை அறிந்துகொளவார்களானால் அதற்கும் நேரகாலத்துடன் வந்திருப்பார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).
தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவரும் தொழுகையாளியே என்ற நன்மாராயம்:
‘உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பாரென்றால், அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார். அவன் தனது குடும்பத்தின் பக்கம் செல்வதை தொழுகையைத் தவிர வேறெதுவும் தடுக்கவில்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).
எவர் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமினுடன் நேர்பட்டுவிடுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்ற நற்செய்தி:
‘நீங்கள் ஆமீன் கூறும் போது வானிலுள்ள மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர், அவர்களது ஆமீனுடன் உங்கள் ஆமீனும் நேர்பட்டு விடும்போது நீங்கள் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).
ஸுரதுல் பாஃதிஹாவின் இறுதியில் இமாம் ஆமீன் கூறுவார், அத்துடன் பின்னாலுள்ளவர்களும் ஆமீன் கூறுவார்கள் இந்த ஆமீனுடன் நேர் படுவதை தான் மேல் உள்ள ஹதீஸ் குறிப்பிடுகின்றது.
தொழுகையாளி அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார் என்ற நற்செய்தி:
‘எவர் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றுவாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).
தொழுகையாளிக்கு மறுமையில் முழுமையான பிரகாசம் என்ற நற்செய்தி:
‘இருள் நேரங்களில் மஸ்ஜிதை நோக்கி நடைபோட்டவர்களுக்கு நாளை மறுமையில் முழுமையான பிரகாசம் இருக்கின்றது என்று நன்மாராயம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அபூதாவுத், திர்மிதி).
பஃஜ்ர், அஸர் தொழுகைகளை நிறைவேற்றுபவருக்கு சுவர்க்கத்தைக்கொண்டு சுபச்செய்தி:
‘எவர் ஸுபஹ் மற்றும அஸர் தொழுகையை நிறைவேற்றி வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).
பஃஜ்ர், அஸர் தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுபவருக்கு கிடைக்கும் நற்செய்தி:
“இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவாக்ளும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். ‘என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?’ என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். ‘அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்” என்று அவர்கள் விடையளிப்பார்கள்”. என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
பஃஜ்ர் தொழுகையை நிறைவேற்றியவர் உற்சாகத்துடன் காலைப்பொழுதை அடைகின்றார் என்ற நற்செய்தி:
“நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், ‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது. எனவே, நீ தூங்கிக் கொண்டேயிரு’ என்ற போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகிறான். அவர் (அவனுடைய போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் உளூச் செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகிறது. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
பஃஜரைத் தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பிலேயே உள்ளார் என்ற சுபச்செய்தி:
“ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாவலில் இருக்கிறார். அவனுடைய பாதுகாவலை (நீங்கள் உதறித் தள்ளி, அதை) உங்களிடம் அல்லாஹ் விசாரணை செய்(யும் நிலையை நீங்கள் ஏற்படுத்)திட வேண்டாம். ஏனெனில், தன்னுடைய பாதுகாவலை (உதறித் தள்ளிய) ஒருவனிடம் அல்லாஹ் விசாரித்தால், அவனை நரக நெருப்பில் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).

No comments:

Post a Comment