Saturday, August 4, 2012

அடிப்படை நம்பிக்கைகள்

ஸூறா யாசீன் றஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த கடைசிக் காலப்பரிவில் அருளப்பட்ட ஓர் அத்தியாயமாகும். மக்காவில் இறங்கிய ஏனைய ஸூறாக்களைப் போலவே இந்த ஸூறாவும் அகீதா எனும் இஸ்லாத்தின் நம்பிக்கை சார்ந்த அடிப்படை அம்சங்களை விளக்குவதாக அமைந்துள்ளது. ஸூறா யாசீனின் ஆரம்ப வசனங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களது ரிஸாலத் எனும் தூதுத்துவத்தின் உண்மையை நிரூபிக்கும் விதத்தில் அமைந்து காணப்படுகின்றன. அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவே இருக்க வேண்டுமென்பதற்கான அறிவார்ந்த தர்க்கரீதியான ஆதாரங்களை இவ்வசனங்கள் முன்வைக்கின்றன.

மேலும் இவ்வத்தியாயம் தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தின் உண்மைபற்றி பிரபஞ்ச அத்தாட்சிகளை எடுத்துக்காட்டியும், பகுத்தறிவு ரீதியாவும் விளக்குகின்றது.

இவற்றுடன் மறுமை பற்றிய ஆதாரங்களும் இந்த ஸூறாவில் இடம்பெற்றுள்ளன. மரணத்தின் பின்னுள்ள வாழ்வினதும் மறுமையினதும் அவசியத்தை இவ்வத்தியாயம் பிரபஞ்ச அத்தாட்சிகளை ஆதாரங்களாகக் கொண்டும் நிரூபிக்கின்றது.

இவை மாத்திரமன்றி ரஸூல் (ஸல்) அவர்களின் நபித்துவத்தை பொய்ப்பித்து, அன்னாரை நிராகரித்து, அவர்களின் தஃவா பணிக்கும் தடையாக இருந்து கொடுமைகள் பல புரிந்துவந்த குறைஷியருக்கு எச்சரிக்கை விடுக்கும் பலவசனங்களும் இந்தச் ஸூறாவில் காணப்படுகின்றன.

இவ்வாறு யாசீன் ஸூறாவானது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான ஏகத்துவம் பற்றிய நம்பிக்கை, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவம் பற்றிய நம்பிக்கை, மரணத்தின் பின்னுள்ள மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை ஆகியவற்றைச் சிறப்பாக விளக்குவதாகவும், இஸ்லாத்தை மறுத்து பொய்ப்பித்து அதற்கெதிரிகளாக இருப்போரை எச்சரிப்பதாகவும் அமைந்து காணப்படுகின்றது. இவ்வாறு இந்த ஸூறா இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை அழகாக விளக்குவதாக அமைந்திருப்பதனால் தான் இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில் ஒவ்வொன்றுக்கும் ஓர் இதயமுண்டு. அல்குர்ஆனின் இதயமாக இருப்பது யாசீனாகும் (ஆதாரம்: திர்மிதி, தாரமி)

மேலும் ஒரு நபிமொழி இவ்வாறு காணப்படுகின்றது:
நீங்கள் இதனை (யாசீன் ஸூறாவை) மரணப்படுக்கையில் இருப்பவர்கள் மீது ஓதுங்கள். (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)

உலகை விட்டும் பிரியும் தறுவாயிலுள்ள முஸ்லிமின் உள்ளத்தில் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பசுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மறுமையின் காட்சிகள் அவர் கண்முன்னே வந்து விட வேண்டும் என்பதற்காகவுமே நபியவர்கள் மரணவேளையில் இருப்போரிடத்தில் யாசீன் ஸூறாவை ஓதுமாறு போதித்திருக்க வேண்டும்.

இந்த அத்தியாயம் யாசீன் எனும் இரு அறபு எழுத்துக்களுடன் ஆரம்பமாகின்றது. இதற்கு பொருள் உண்டா இல்லையா என்பதிலும் பொருளிருப்பின் அது என்ன என்பதிலும் முபஸ்ஸிரீன்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. யாசீன் என்பது மனிதனே! எனும் பொருளைக் கொடுக்குமென இப்னு அப்பாஸ் (றழி) அவர்களும் இன்னும் பல தாபிஈன்களும் கூறியுள்ளனர். சிலர் இது அல்லாஹ்வுக்குரிய ஒரு திருநாமமாகும் என்கின்றனர். வேறு சிலர் தலைவரே எனும் சொல்லின் சுருக்கமான வடிவமே யாசீன் என்பதாகும் எனக்குறிப்பிடுகின்றனர்.

இதற்கு மேலுமோர் பொருத்தமான விளக்கமும் காணப்படுகின்றது. அதாவது யாசீன் என்பது அரபு அரிச் சுவடியிலுள்ள இரு எழுத்துக்களாகும். இவற்றையும் இவை போன்ற ஏனைய எழுத்துக்களையும் கொண்டு அல்குர்ஆனில் வசனங்கள் அமைந்துள்ளன. ஆனால் இவ்வெழுத்துக்களை நன்கு தெறிந்து வைத்துள்ள அரபிகளுக்கு இவற்றை கொண்டு அல்குர்ஆனில் உள்ள வசனங்களை போல அவற்றின் தரத்தில் அமைப்பில் வசனங்களை அமைக்க முடியாதிருந்தது. இது ஒன்றே அல்குர்ஆன் நிச்சயமாக அல்லாஹ்வினாலேயே அருளப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு போதிய சான்றாகும்.

யாஸீன் எனும் இவ்வெழுத்துக்களுக்கு இறுதியாக நாம் குறிப்பிட்ட இவ்விளக்கம் பொருத்தமாக உள்ளது என்பதற்கு இவ்வெழுத்துக்களை தொடர்ந்து வல்குர்ஆனில் ஹகீம் என்று குர்ஆனைப் பற்றி பிரஸ்;தாபிக்கப்பட்டிருப்பது ஆதாரமாக அமைகின்றது.

அல்குர்ஆனில் பல ஸூறாக்களின் ஆரம்பத்தில் அரபு அரிச்சுவடியின் தனி எழுத்துக்கள் காணப்படுவதையும் அவற்றை தொடர்ந்து வரும் வசனம் பெரும்பாலும் அல்குர்ஆனைப் பற்றி குறிப்பிடுவதை அவதானிக்கலாம்.

ஸூறாவின் அடுத்த வசனம் பின்வருமாறு:
முற்றிலும் ஞானம் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக புனித அல்குர்ஆன் மீது சத்தியம் செய்யும் அளவிற்கு அல்லாஹ் எந்த உண்மையை வலியுறுத்திக் கூற விரும்புகின்றான்? அதனை அடுத்து வரும் வசனம் கூறுகின்றது.

நிச்சயமாக நீர் எமது தூதர்களில் ஒருவர்
இந்த உண்மையை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரே என்ற உண்மையை நிரூபிப்பதற்காகவே அல்லாஹ் அல்குர்ஆன் மீது சத்தியம் செய்துள்ளான். அந்தக் குர்ஆனை முற்றிலும் ஞானம் நிறைந்தது என்றும் வர்ணித்துள்ளான். அதாவது அல்லாஹ் இங்கு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஞானம் நிறைந்த அறிவார்ந்த விஷயங்கள் பொதிந்த இந்த குர்ஆன் ஒன்றே நீங்கள் எமது தூதர்தான் என்பதற்கு தக்க சான்றாகும். இத்தகைய ஞானம் நிறைந்த கருத்துக்களை ஓர் இறைத்தூதரே கூற முடியும் என்பதனை இந்த குர்ஆனை நோக்குகிறவர் புரிந்து கொள்ள முடியும். இது முஹம்மத் ஆகிய உங்களது கருத்துக்களாகவோ, பிரிதொரு மனிதனின் கருத்துக்களாகவோ இருக்க முடியாது என்பதையும் விளங்க முடியும் என்று அல்லாஹ் கூற விரும்புகின்றான்.

அடுத்து வரும் வசனம் இவ்வாறு அமைகின்றது.
நீர் நேர்வழியில் இருக்கின்றீர்
நீர் ரஸூல்மார்களில் ஒருவராவீர் என்று கூறி முஹம்மத் நபியவர்களின் இறைத்தூதின் உண்மையைக் குறிப்பிட்டு தொடர்ந்து நீர் நேர்வழியில் இருக்கின்றீர் எனக் கூறுவதன் மூலம் அவர்கள் கொண்டு வந்த அந்த தூதின் தன்மை விளக்கப்படுகிறது. அத்தூது எத்தகைய கோணலும் மாணலும் இன்றி நேராகவும் சீராகவும் இருக்கின்றது. அது கூறும் சத்தியத்திலும் எவ்வித மயக்கமும் குழப்பமுமற்ற சீர்மை காணப்படுகின்றது என விளக்கப்படுகின்றது.

உண்மையில் இத்தூது நேரானதும் சீரானதும்தான். பிரபஞ்சத்தின் இயல்புடனும் அதன் சட்டத்துடனும் மனிதனைச் சூழவுள்ள பொருட்கள் ஜீவராசிகள் ஆகிய அனைத்துடனும் கூட முட்டாமல் மோதாமல் முரண்படாமல் சீராக இணங்கிச் செல்வதாக இது உள்ளது. அல்லாஹ்வைச் சென்றடைதற்குரிய நேரான பாதையாகவும் இந்த தூதே காணப்படுகின்றது. ஆம்! இதுதான் நீர் நேரான வழியில் இருக்கின்றீர் என்ற இவ்வசனத்திற்குரிய விளக்கமாகும்.
ஸூறாவின் அடுத்த வசனம் இவ்வாறு அமைகின்றது.

இது யாவரையும் மிகைத்தோனும் கிருபையுடையோனுமாகிய அல்லாஹ்வால் அருளப்பட்டதாகும்.
மேலே எந்த குர்ஆனின் மீது சத்தியம் செய்து முஹம்மத் நபியவர்களின் இறைத்தூதின் உண்மை வலியுறுத்தப்பட்டதோ அந்த அல்குர்ஆனை இறக்கியவனின் அந்த நேரான பாதையைக் காட்டியவனின் இரு பண்புகள் இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ளன. ஒன்று அவன் அஸீஸ - சக்தி வாய்ந்தவன், யாவற்றையும் மிகைத்தவன் என்பதாகும். அடுத்தது ரஹீம் - அருளாளன் எனும் பண்பாகும். அல்லாஹ்வுக்கு பல திருநாமங்கள் இருக்க குறிப்பாக இவ்விரு பண்புகள் மாத்திரம் இங்கு தெரிவு செய்யப்பட்டு குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணம் இந்த குர்ஆன் கூறும் உபதேசங்களை புறக்கணிப்பதால், ஏற்க மறுப்பதால் எத்தகைய பாதகமும் ஏற்படப்போவதில்லை என்று மனிதர்கள் நினைக்கக்கூடாது. ஏனெனில் இதனை அருளியவன் சாமானியமானவனல்ல. அவன் அஸீஸ் - பலமானவனாகவும் யாவற்றையும் மிகைத்தோனுமாக இருக்கின்றான் என்பதனை உணர்த்துவதற்காகத்தான். அடுத்து ரஹீம் - அருளாளன் எனும் பண்பு கூறப்பட்டுள்ளதற்கான காரணம் யாதெனில் அவன் உங்கள் மீது கொண்ட அருளின் காரணமாகவே ஈருலகிலும் வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்கான நேர்வழியை காண்பிக்கக் கூடிய தனது தூதரையும் மகத்துவமிக்க இந்தக் குர்ஆனையும் அனுப்பிவைத்தான் என்பதனை விளக்குவதற்காகத்தான்.

அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்டுகொள்ள முடியாதவாறு அவர்கள் ஆக்கப்பட்டிருப்பதையும் அவர்களைப் பொருத்தவரையில் ஈமானின் வாயில்களும் வழிகளும் முற்றாக மூடப்பட்டிருப்பதையும் இவ்வசனங்கள் இவ்வுதாரணத்திற்கூடாக சித்தரித்துக் காட்டுகின்றன.
செத்துவிட்ட உள்ளங்களைப் பொருத்தவரையில் அவற்றுக்கு எதுவும் பலிக்காது. எனவேதான் அத்தகையோரைப் பற்றி அடுத்துவரும் வசனம் பின்வருமாறு கூறுகின்றது.

அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் செய்யாமல் இருப்பதும் சமமே. அவர்கள் விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள்.
தொடர்ந்து எத்தகையோருக்கு நல்லுபதேசமும் எச்சரிக்கை செய்வதும் பயனளிக்கும் என்பது விளக்கப்படுகின்றது.

எவர்கள் நல்லுபதேசமான இவ்வேதத்தைப் பின்பற்றி மறைவாகவும் ரஹ்மானுக்கு பயந்து நடக்கின்றாரோ அவர்களுக்குத்தான் நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல் வேண்டும் வேதத்தை ஏற்று பின்பற்றி அல்லாஹ்வை பயந்து வாழும் இத்தகையோர் எச்சரிக்கை செய்யப்படுவதற்கு மாத்திரமன்றி நன்மாராயணம் கூறப்படுவதற்கும் அருகதையுடையவர்களாவர். இதனால் தான் அல்லாஹ் அடுத்து பின்வருமாறு கூறுகின்றான்:

ஆகவே இத்தகையோருக்கு மன்னிப்பும் கன்னியமான கூலியும் உண்டென்று நீர் நற்செய்தி கூறுவீராக
ஆம்! இவர்கள் பிடிவாதமின்றி செய்கின்ற பாவங்களுக்கு மன்னிப்புக் கிட்டும். அல்லாஹ்வை, அவனைக் காணாமலேயே அஞ்சி பயந்து நடந்து கொள்வதற்காகவும் அவன் அருளியதை ஏற்று பின்பற்றுவதற்காகவும் அவர்களுக்கு நற்கூலியும் கிடைக்கும்.

உண்மையில் இறையச்சமும் இறைவேதத்தைப் பின்பற்றுதலும் ஒன்றோடொன்று இணைந்த பிரிக்க முடியாத அம்சங்களாகும். இறையச்சம் குடிகொண்ட உள்ளத்தை உடையவனிடத்தில் இயல்பாகவே இறைவேதத்தை பின்பற்றும் தன்மை வந்து விடும்.
அடுத்துவரும் வசனம் இந்த வேதம் இறக்கப்பட்டதற்கான நோக்கத்தை விளக்குகின்றது. யாதொரு தூதராலும் தங்கள் மூதாதையர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி முற்றிலும் கவலையற்று) பாராமுகமாக இருக்கின்ற மனிதருக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவேண்டும் என்பதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டது)

குறிப்பாக இவ்வசனம் அல்குர்ஆன் அருளப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த அரபிகளை விழித்துப் பேசுகின்றது. தொடர்ந்து வரும் வசனம் இந்த அரபியரில் இருந்த பிடிவாதக் காரனைப் பற்றிய அல்லாஹ்வின் முடிவைக் கூறுகின்றது. நிச்சயமாக இவர்களில் பெரும்பாலோர் மீது அவர்கள் நரக வாசிகள் தாம் என்ற (இறைவனின்) வாக்கு உண்மையாகி விட்டது. அதனால் அவர்கள் விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள். நிச்சயமாக நாம் அவர்களின் கழுத்துக்களில் மோவைக் கட்டைகள் வரை விளங்குகளைப் போட்டு விட்டோம். ஆதலால் அவர்களின் தலைகள் குணியமுடியாதவாறு நிமிர்ந்து விட்டன. அவர்களுக்கு முன்புறம் ஒரு தடுப்பையும், பின்புறம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தி நாம் அவர்களை மூடிவிட்டோம். எனவே அவர்கள் எதனையும் பார்க்க முடியாது.

இவ்வசனங்கள் அந்தப் பிடிவாதக்காரர்களின் நிலையை விளக்குவதற்கான ஓர் உதாரணத்தை முன்வைக்கின்றது. அவர்களின் பிடிவாதத்தின் காரணமாகவும் வம்புத்தனத்தின் காரணமாகவும் இதனை அடுத்து வரும் வசனம் அற்புதமாக விளக்குகின்றது.

நபியே! நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் (குர்ஆன்) ஆகிய நல்லுபதேசத்தை பின்பற்றி மறைவில் ரஹ்மானை (அல்லாஹ்வை) அஞ்சுகின்றாரோ அவருக்குத்தான்.

No comments:

Post a Comment