Saturday, August 4, 2012

அழிவு தரும் உலக ஆசை

முச்சுத்திணற அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக! செல்லும் வேகத்தில் குளம்பை அடித்து தீப்பொறி பறக்கச் செய்யும் அந்தக் குதிரைகள் மீது சத்தியமாக! அதிகாலை வேளையில் திடீரென தாக்கும் அந்தக் குதிரைகள் மீது சத்தியமாக! அவ்வாறு ஓடுவதன் காரணமாக புழுதியைக் கிளப்பி விடும் அக்குதிரைகள் மீது சத்தியமாக! எதிரிக் கூட்டத்தின் மத்தியில் சென்று போராடும் அக்குதிரைகள் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான். அவனே அதற்கு சாட்சியாகவும் இருக்கின்றான். மேலும் அவன் செல்வத்தை மிகக் கடுமையாக நேசிக்கின்றான். கப்ருகளில் உள்ளவை வெளியே எறியப்பட்டு சிதறடிக்கப்பட்டும் போது நிகழ்பவற்றை அவன் அறிந்து கொள்ளவில்லையா? மேலும் உள்ளங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது நிகழ்பவற்றை அவன் அறிந்து கொள்ளவில்லையா? நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கு அறிந்தவனாகவே இருப்பான் (ஸூறா அல்ஆதியாத்: 1-11)

பதினொரு வசனங்களைக் கொண்ட அல்ஆதியாத் மக்காவில் இறக்கியருளப்பட்ட ஒரு ஸூறாவாகும்.

இவ்வத்தியாயம் ஆரம்பமாக எதிரிகளைத் தாக்கும் குதிரைகளைப் பற்றிப் பேசுகின்றது. அக்குதிரைகள் மிக வேகமாக ஓடுகின்றன. மூச்சுத் திணற ஓடுகின்றன. அவற்றின் குளம்புகள் கற்களில் பட்டு தீப்பொறி பறக்கும் அளவுக்கு அதி வேகமாக ஓடுகின்றன. புழுதி கிளப்பி அப்பிரதேசமே மறையும் அளவுக்கு அவற்றின் ஓட்டம் அமைந்திருக்கின்றது என்று கூறி அக்குதிரைப் படையை வர்ணித்து, அக்குதிரைகளின் மீது சத்தியமும் செய்யப்படுகின்றது. இவ்வாறு அக்குதிரைகள் மீது சத்தியம் செய்வதன் மூலமாக அவற்றின் சிறப்பும் மாண்பும் எடத்துக் காட்டப்படுகின்றன.

குதிரைகள் மீது சத்தியம் செய்து வலியுறுத்த வந்த உண்மைகள் தொடர்ந்து கூறப்படுகின்றன.

மனிதன், இறைவன் தனக்குச் செய்த அருட்கொடைகளை மறந்து நன்றி கெட்ட விதத்தில் நடந்து கொள்கின்றான். அவனது நன்றி கெட்டப் போக்குக்கு அவனது பேச்சு, செயல்கள், நடத்தைகள் சான்றாக இருக்கின்றன. இவைதான் அந்த உண்மைகள். உலக செல்வத்தை அதிகம் நேசிக்கும் மனிதனது சுபாவம் பற்றியும் இந்த ஸூறா பேசுகின்றது. இறுதியாக மறுமையின் பயங்கரத்தை, செல்வமோ செல்வாக்கோ பயன்படாத அந்த நாளின் நிலையை நினைவூட்டி ஸூறா நிறைவுபெறுகின்றது.

இவ்வத்தியாயத்தின் வசனங்களை சற்று விளக்கமாக கீழே நோக்குவோம்:

மூச்சுத்திணற அதிவேகமாக ஓடம் குதிரைகள் மீது சத்தியமாக!

இவ்வசனத்தில் அல்லாஹ் எதிரிகளைத் தாக்குவதற்காகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியம் செய்கின்றான். அவற்றை மிக வேகமாக ஓடுபவை என்றும் மூச்சுத்திணற கனைத்துக் கொண்டு ஓடுபவை என்றும் வர்ணிக்கின்றான்.

தீப்பொறி பறக்கச் செய்யும் அந்தக் குதிரைகள் மீது சத்தியமாக!

இவ்வசனமுமு; அக்குதிரைகளின் கடகதி வேகத்தையே விளக்குகின்றது. அவற்றின் குளம்புகள் பாறைகளில் பட்டு பொறி பறக்கின்றது. அந்த அளவு வேகமாக அவை ஓடுகின்றன. அவை எங்கு செல்கின்ற என்பது அடுத்த வசனத்தில் விளக்கப்படுகின்றது:

அதிகாலை வேளையில் திடீரெனத் தாக்கும் அக்குதிரைகள் மீது சத்தியமாக!

ஆம். இந்தக் குதிரைகள் இவ்வளவு வேகமாகச் செல்வது ஒரு தாக்குதலை நடாத்துவதற்காகவே. அதுவம் எதிரிகள் விழித்துக் கொள்ளாத நேரம் பார்த்து, அதிகாலைப் பொழுதில் ஒரு திடீர்த் தாக்குதலை தொடுக்கச் செல்கின்றன.

புழுதியைக் கிளப்பி விடும் அக்குதிரைகள் மீது சத்தியமாக!

இக்குதிரைகள் மிக வேகமாக ஓடுவதனால் புழுதி கிறம்புகின்றது. எங்கும் தூசுப் படலம். எதிரிகள் இப்படையை சரியாக கண்டு கொள்ள முடியாத அளவுக்கு எங்கும் புழுதி மயம்.

கூட்டத்தின் நடுவே சென்று தாக்கும் குதிரைகள் மீது சத்தியமாக!

அக்குதிரைகள் புழுதி கிளப்ப, எதிரிக் கூட்டத்தின் நடுவே சென்று அதைக் கடுமையாக தாக்குகின்றன. எதிரிகளை அவர்கள் மத்தியில் சென்றே தாக்குவதனால் அவர்கள் நிலைகுலைந்து சின்னாபின்னப்பட்டு விடுவர். சிதறி ஓடுவர் என்பதனால் அப்படிச் செய்கின்றன.

ஒரு யுத்தத்தின் விறுவிறுப்பான கட்டங்களை துள்ளும் நடையில் துல்லியமாக சித்தறித்துக் காட்டுகின்ற அல்குர்ஆன் வசனங்கள் இவை. அல்லாஹ் இவ்வசனங்களுக்கூடாக குதிரைகள் மீது சத்தியம் செய்வதானது அவற்றின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.

உண்மையில் இஸ்லாமிய நோக்கில் குதிரைக்கு தனிச் சிறப்பு உண்டு. புனிதப் போருக்கான ஒரு முக்கிய சாதனம் என்ற வகையில் அதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. உலகம் முடியும் வரை குதிரையின் மதிப்பும் பெறுமதியும் குன்றப் போவதில்லை என ஹதீஸ்களும் விளக்குகின்றன.

குதிரைகளின் முன்னெற்றி உரோமங்களில் உலகம் அழியும் வரை அருளும் பாக்கியமும் பிணைக்கப்பட்டிருக்கின்றது என்பது நபி மொழி (ஆதாரம் : புஹாரி)

இக்குதிரைகள் மீது சத்தியம் செய்து அல்லாஹுத்தஆலா வலியுறுத்த விரும்புகின்ற உண்மைகளை தொடர்ந்து வரும் வசனங்கள் விளக்குகின்றன.

நிச்சயமாக மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.

இதுதான் அந்த உண்மை. மனிதன் தனது இறைவனது அருட்கொடைகளுக்கு நன்ற சொல்லாதவனாக இருக்கின்றான். எப்போதும் தனக்கு ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் பெரிதாக அலட்டிக் கொள்ளும் அவன், தனக்கு அல்லாஹ் அருளியுள்ள அருட்பெறுகளை மறந்து விடுகின்றான். அவனது இந்த நன்றி மறந்த போக்குக்கு அவனே சாட்சியாகவும் இருக்கின்றான். அவனது சொல், செயல், நடத்தை இதனைக் காட்டுகின்றது. இவ்வுண்மையை ஸூறாவின் அடுத்து வரும் வசனம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

அவன் அதற்கு சாட்சியாகவும் இருக்கின்றான்

இங்கு அவன் என்பது அல்லாஹ்வைக் குறிக்கும் என்றும் இந்தவகையில் மனிதனது நன்றி மறந்த போக்கிற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கின்றான் என்றும் இவ்வசனத்திற்கு விளக்கம் கொடுப்போரும் உள்ளர். மறுமையில் மனிதன், தான் உலகில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரித்து வாழ்ந்ததனை ஏற்று தனக்கெதிராகவே சாட்சி சொல்வான் என்ற கரத்தையே இவ்வசனம் சொல்கின்றது என்று மற்றும் சில அறிஞர்கள் விளக்குகின்றனர்.

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதிலும் அவனை வணங்கி வழிபடுவதிலும் பொடுபோக்காக நடந்து கொள்ளும் மனிதன் உலக செல்வங்களைப் பொறுத்தவரையில் மட்டும் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றான் என்பதை தொடர்ந்து வரும் வசனம் விளக்குகின்றது:

மேலும் அவன் செல்வத்தை விரும்புவதில் மிகவும் கடுமையாக இருக்கின்றான்.

ஈமான் இல்லாத மனிதனது இயல்பு இப்படித்தான் இருக்கும். உலக வாழ்வும் அதன் இலாபமுமே அவனது இலக்கு. ஈமான் ஓர் உள்ளத்தில் நுழைந்து விடும் போது அது அவனையும் அவனது கண்ணோட்டங்கள், பெறுமானங்கள், அளவு கோல்கள் முதலான அனைத்தையும் மாற்றிவிடும். அவனது நிராகரிப்பை, நன்றி மறந்த போக்கை மாற்றி, அல்லாஹ்வின் அருட்கொடைகளை ஏற்று அவற்றுக்கு நன்றி செலுத்தும் நிலைக்கு அவனை ஆக்கி விடும். மேலும் ஈமான் ஆனத அதனைப் பெற்ற மனிதனில் இருந்த சுயநலத்தையும் உலோபித்தனத்தையும் பரோபகாரமாகவும் பரந்த மனப்பான்மையாகவும் மாற்றி விடும். மனிதன் தான் போட்டியிட்டு சிரமப்பட்டு பெற்றுக் கொள்ள வேண்டிய பெறுமானங்கள் எவை என்பதையும் ஈமான் அவனுக்கு உணர்த்தும்.

உண்மையில் ஈமான் இல்லாத மனிதன் அற்பமானவன். சிறியவன். இக்குறுகிய பூவுலகுடன் கட்டுண்டவன். தனது குறுகிய ஆயுளுடன் மட்டுப்படுத்தப்பட்டவன். ஈமான் ஒன்று மாத்திமே இந்த பூமியை விட விசாலமான பரந்து விரிந்த ஒரு பேருலகுடன் மனிதனை தொடர்புபடுத்தவல்லது. உலகையும் மறுமையையும் இணைக்கக் கூடிய முடிவில்லாத உலகத்துடன் தொடர்புபடுத்தக் கூடியதுமாகும்.

ஸூறாவின் இறுதிப் பகுதி உலக மோகத்தில் மூழ்கி இருக்கும் மனிதனுக்கு உலக ஆசையை மறக்கச் செய்யும் ஒரு மறுமையின் காட்சியை எடுத்துக்கான்பிக்கின்றது. இதன் மூலம் நன்றி மறந்து உலக சுகபோகங்களில் இன்பங் கண்டு வாழும் மனிதனுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படுகின்றது.

கப்ருகளில் உள்ளவை வெளியேற்றப்பட்டு சிதரிக்கப்படும் போது நிகழ்பவற்றை அவன் அறியமாட்டானா?

உலக முடிவைத் தொடர்ந்து புதைகுழிகளில் உள்ள அனைவரும் விசானைக்காக எழுப்பப்படுகின்ற உண்மையை, நன்றி மறந்து உலக இன்பத்தில் மூழ்கி வாழும் மனிதன் அறியவில்லையா என்று இவ்வசனம் வினா எழுப்புகின்றது.

உலக அழிவைத் தொடர்ந்து நடக்க இருக்கின்ற பயங்கரங்களைப் பற்றியும் மேற்கண்ட நிலையில் உலகில் வாழ்ந்தோரின் அன்றைய அவல நிலையைப் பற்றியும் அல்குர்ஆன் பல இடங்களில் பரவலாக விளக்கியுள்ளது. ஸூறா யாஸீன் ஒரு வசனம் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்:

ஸூர் ஊதப்பட்டால் அவர்கள் உடனடியாக தமது புதைகுழிகளில் இருந்து வெளிப்பட்டு தாங்கள் இறைவனிடம் வேகமாக ஓடி வருவார்கள். மேலும், எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! எங்களை எங்கள் உறங்குமிடங்களில் இருந்து எழுப்பியவர் யார்? என்று வினவுவார்கள். அதற்கு அவர்களை நோக்கி, இது ரஹ்மானான அல்லாஹ் உங்களக்கு வாக்களித்ததும் இறைத்தூதர்கள் உங்களுக்கு உண்மை என்று எடுத்துக் கூறியதுமாகும் எனக் கூறப்படும்.

மேலும், உள்ளத்தில் உள்ளவை வெளிப்படுத்தப்படும் போது நிகழ்பவற்றை அவன் அறிய மாட்டானா?
இவ்வசனம் மரணித்தவர்கள் மறுமையில் எழுப்பப்படுவதனைத் தொடர்ந்து அவர்களின் அனைத்து இரகசியங்களும் மர்மங்களும் பகிரங்கப்படுத்தப்படும் பயங்கரத்தைச் சொல்கிறது. ஏனெனில், அல்லாஹ் அந்நாளில் யாவரையும் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருப்பான். ஸூறாவின் இறுதி வசனம் இவ்வுண்மையை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

நிச்சயமாக அவர்களின் இறைவன் அந்நாளிலே அனைத்தையும் நன்கு அறிந்தவனாக இருப்பான்.

அந்நாளில் விசாணைக்காக அனைவரும் அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு அழைத்து வரப்படுவர். அங்கே அவன் அவர்களின் அனைத்து இரகசியங்களையும் அறிவிப்பான். அங்கு எதுவும் எவருக்கும் மறைவானதாக இருக்காது. நல்லவர்கள் தமக்குரிய நற்கூலியையும் நன்றி மறந்து வாழ்ந்தவர்கள் தமக்குரிய தண்டனையையும் நிச்சயம் பெறுவர்.
மனிதன் மேற்கண்ட உண்மைகளை நன்கு உணர்ந்து இவ்வுலகிலேயே தனது வாழ்வை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற போதனையை இந்த ஸூறா பொதுவாக முன்வைக்கின்றது. சடவாத சிந்தனையின் தாக்கத்திற்கு உட்பட்டு உலக சம்பத்துக்களை அடைவதையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு வாழும் மனிதனில் உணர்வுகளை தட்டியெழுப்புவதாகவும் அவனையே உலுக்கி உசுப்புவதாகவும் இந்த ஸூறா அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment