Sunday, September 16, 2012

கற்போம்- கற்பிப்போம்கற்போம்- கற்பிப்போம் ( Learming and Teaching together) என்ற சிஸ்டம்
இஸ்லாமிய தாவா அல்லது பிரச்சாரம் என்பது இன்று பெரும்பாலும் பயான்கள் மூலம் நடத்தப்படுகிறது. உரைகள் நிகழ்த்த தனிப்பட்ட மேடைகள் உதவுகின்றன. பேசிய உரைகள், அந்தக் காலத்தில் ஆடியோ கேசட்டுகளிலும், பின்னர் படிப்படியாக, வீடியோ, சிடி , இன்டர்நெட், தம் டிரைவ் என பல பரிமாணங்களில் கேட்க, பார்க்க முடிகிறது.
இஸ்லாத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, குரு- மாணவர் சிஸ்டம் கிடையாது மட்டுமல்ல: பிழையானதும் கூட… கற்போம் – கற்பிப்போம் ( Learming and Teaching together ) , என்ற சிஸ்டம் தான் சஹாபாக்கள் காலத்தில் இருந்தது. அதாவது ரசூல் (ஸல்) அவர்கள் பயிற்றுவித்த சமூகம் அப்படித்தான் உருவாக்கப்பட்டது. நான் கற்றுக் கொடுப்பவன் மட்டுமே, அதாவது நான் பயான் செய்வேன்…   அதற்கான தகுதி எனக்கு உள்ளது…   நான் நிறைய படித்து உபதேசம் செய்யும் உயரிய அந்தஸ்த்தில் அல்லாஹ் என்னை வைத்துள்ளான்…மக்களாகிய நீங்கள் எல்லோரும் கேட்க வேண்டும் என்று என்று யார் சொன்னாலும் அது ரசூல் (ஸல்) அவர்கள் பயிற்றுவித்த முறை கிடையாது.  தமிழகத்தில் ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது. அதாவது “கேட்டு கேட்டு இஸ்லாம்” என்பார்கள்….. இதனை எல்லா ஆலிம் உலமாக்களும் பயானிலும் சொல்வார்கள். பேசும்போது தம்மை தாழ்த்தி பணிவாக பேசுவார்கள். ஆனால் எந்த பள்ளியிலாவது சாதாரண ஆட்களை கொஞ்சம் பயிற்சி கொடுத்தாவது ஜும்மா பயான் செய்ய அனுமதிப்பார்களா ????
ஆக ஒருவர் பேசி — எப்பொழுதும் பேசி பேசி— ஒரு சமூகம் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருந்தால் அதற்குப் பெயர் மதம். இஸ்லாம் மதம் அல்ல. இஸ்லாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதமாக ஆக்கவே இல்லை. ஆகவே குரு- மாணவர் சிஸ்டத்தை நீக்கி, கற்போம் – கற்பிப்போம்( Learming and Teaching together) என்ற சிஸ்டம் உருவாக நாம் என்ன செய்யவேண்டும் ? உங்களின் பதிவுகளை இங்கே தெரிவியுங்கள்.
பயான் பண்ணுவதற்காக ஒரு சிலர் இருப்பது மேலோட்டமாக நல்லதுதான்… அது மற்ற மதங்களுக்கும், இயக்கங்களுக்கும் நன்மையே. ஆனால் இந்த உலகிற்கே ரஹ்மத்தில் ஆலமீனாக வந்த நபிகள் ஸல் அவர்கள் தங்களின் உபதேசத்தை ஒரு சமயத்தில் எவ்வளவு நேரம் நீட்டினார்கள்?  சத்திய சஹாபாக்கள் பலரும் எப்படி பயான் செய்தார்கள்?  பேச்சாளர்களை தயார் செய்தார்களா? பின்பற்றுபவர்களை தயார் செய்தார்களா?
இந்த கேள்விகளுகெல்லாம் விடை தெரியும் போது “கற்போம் – கற்பிப்போம்” ( Learming and Teaching together ) , என்ற சிஸ்டம் என்றால் என்ன என்பதை நாம் அறிய முடியும். இஸ்லாமிய கல்வி வேண்டும் என எல்லா தரப்பு முஸ்லிம்களும் சொல்கிறார்கள். ஆனால் மறைமுகமாக “குரு- மாணவர்” அதாவது “உஸ்தாத் – பின்பற்றுபவர் ” என்ற நிலைப்பாடுகள் தொடர எல்லாம் செய்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாக சில பல ஆண்டுகள் படித்து பட்டம் வாங்கிய பின்தான் இமாமாக, பணிபுரிய வேண்டும் என்ற விதி யாரால் எப்பொழுது உருவாக்கப்பட்டது ? சுபுஹையும் , லுஹரையும் தொழ வைக்கும் ஒருவர் பிந்தைய நேரத்தில் முழுமையாக வியாபாரம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது? அதேபோல அசர், மகரிப், இஷா, தொழ வைப்பவர் ஏன் பகலில் வேறு வேலைக்குச் செல்ல ஏற்பாடு செய்யக் கூடாது? ஒவ்வொரு மகால்லாவிலும், அந்த பள்ளிக்கு அருகாமையில் வசிக்கும் பத்துப் பேரை தொழுகை நடத்தும் பயிற்சியினை ஏன் சொல்லிக் கொடுக்க கூடாது?  இந்த கேள்விகளுகெல்லாம் விடை தெரியும் போது “கற்போம் – கற்பிப்போம்” (Learming and Teaching together ) , என்ற சிஸ்டம் என்றால் என்ன என்பதை நாம் அறிய முடியும்.

No comments:

Post a Comment