Saturday, March 3, 2012

அழைப்புப்பணி செய்வோம் வாருங்கள்….


Post image for அழைப்புப்பணி செய்வோம் வாருங்கள்….
தங்களது தாயகத்தை விட்டு விட்டு அந்நிய பூமியில் வசிக்கக் கூடிய முஸ்லிம்கள், தற்பொழுதுள்ள கால கட்டத்தில் இஸ்லாத்திற்குச் சான்று பகரக் கூடிய முஸ்லிம்களாக தங்களை சொல்லாலும், செயலாலும் மாற்றிக் கொள்வது அவசியமானதொன்றாகும்.
ஏனெனில், இன்றைய மேலை நாட்டுச் சமூகம் இதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையை விட்டு விட்டு உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்காக ஒரு ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நீங்களும், உங்களது பழக்க வழக்கங்களும், பண்பாடுகளும் இஸ்லாத்திற்குச் சான்று பகர வேண்டுமே ஒழிய, இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை ஏற்படுத்தி விடக் கூடாது. இதற்கான காரணம் மிகவும் பாரதூரமானது. பல புதிய சகோதரர்களிடம் உங்களை இஸ்லாத்தில் கவர்ந்த அம்சம் எது என்று கேட்கும் பொழுது, பலர் தங்களுடன் பழகும் நபர்கள் மூலமாக, அதைப் போலவே வணக்க வழிபாடுகள் மூலமாக ஈர்க்கப்பட்டதாக விளக்கமளித்திருக்கின்றார்கள்.
எனவே, பெரும்பான்மை சமூகத்தில் சிறுபான்மையினராக வாழக் கூடிய முஸ்லிம்கள் இஸ்லாத்திற்குச் சான்று பகரக் கூடியவர்கள் தங்களது நடத்தைகளை மாற்றிக் கொள்வதே ஒரு மிகப் பெரிய அழைப்புப் பணியாகும்.
சில அறிவுரைகள்
உங்களது சொல்லும் செயலும் இறைவனுக்கு அடிபணிந்து இருக்கட்டும். உங்களது செயல்பாடுகள் எப்பொழுது இறைவனையும் அவனது தண்டனையையும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கட்டும். இதன் மூலம் நீங்கள் உங்களையும், உங்களது குடும்பத்தையும் பிற சமூக பழக்கவழக்கங்களின் பாதிப்பிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். மற்ற கலாச்சாரங்களுக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதையும், மற்ற கலாச்சாரங்களினால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறுவது அவசியமாகும்.
ஷரீஆ அங்கீகரிக்காத எந்தவொரு வணக்க வழிபாடுகள், பழக்க வழக்கங்களை சற்றும் அனுமதிக்கக் கூடாது. இதற்கு ஷரீஅத் அனுமதித்த மற்றும் அனுமதி வழங்காத அம்சங்கள் பற்றிய தெளிந்த அறிவு இருப்பது அவசியமாகும். இன்னும் பிக்ஹு போன்ற இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைச் சட்டங்கள் (ஒளு, குளிப்பு, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.. இன்னும்) போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவும், தகுந்த சந்தர்ப்பங்களில் இவற்றைக் கையாண்டு, சிறு உரைகள் வழங்கக் கூடிய திறமையும் பெற்றிருத்தல் அவசியமாகும்.
திருமறைக் குர்ஆனை தெளிவாக ஓதக் கூடிய மற்றும் அதன் சில வசனங்களுக்காகவாவது பொருளுடன் விளக்கமளிப்பதற்கு தங்களை பயிற்று வித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சமூகத்தில் உள்ளவர்களை ஒர் அணியில் நின்று, கூட்டுத் தொழுகை (ஜமாத்) நிறைவேற்றுவதற்கு தூண்டிக் கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தின் அனைத்துச் செய்திகளும் அனைவருக்கும் பொதுவானவை, அனைத்து மக்களுக்கும் அருளப்பட்டவை என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்வதோடு, இது நமக்கு மட்டும் அருளப்பட்ட மார்க்கம் என்ற சுயநலத்தைக் கைவிட்டு, இஸ்லாமியச் செய்திகள் அடையாத உள்ளங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் பற்றி தெளிவான விளக்கத்தை மாற்றுமத நண்பர்களுக்கு வழங்க வேண்டியது, முஸ்லிம்களின் மீதுள்ள கடமையாகும். இன்றைக்கு மாற்றுமத நண்பர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி தவறான அறிமுகம் செய்யப்பட்டு, அவர்களது உள்ளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறாக புரிந்துணர்வு நிறைந்து கிடக்கின்றது. அவற்றை உரிய முறையில் விளக்கமளித்துக் களைய வேண்டியது, அவர்களைச் சுற்றி உள்ள முஸ்லிம்களின் மீதான கடமையாகும்.
என்னைப் பற்றி ஒரு செய்தி தெரிந்திருந்தாலும் அதைப் பிறருக்கு எத்திவையுங்கள். நீஙகள் பனூ இஸ்ரேவலர்களைப் பற்றி பேசுவது குற்றமில்லை. எவர் என் மீது வேண்டுமென்று பொய்யுரைப்பாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம்: புஹாரி ‘(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (அந்நஹ்ல் 16: 125).
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்), மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.” (4: 165).
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல் அஸ்ர் 103: 1-3).
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில்) நீங்கள் நல்லதைச்செய்ய ஏவுகிறீர்கள், தீயதை விட்டும் விலக்குகிறீர்கள், இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள், வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கைகொண்டோராயும் இருக்கின்றனர், எனினும் அவர்களில் பலர் (இறைக்கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.” (ஆலு இம்ரான் 3: 110).
‘(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும், நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன், நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம், அல்லாஹ் மிகத் தூய்மையானவன், ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.” (யூசுப் 12: 108).
‎4838. அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்
‘(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 48:8 வது) குர்ஆன் வசனத்தையே ‘தவ்ராத்’ வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:
‘நபியே! நிச்சயமாக, நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீங்கள் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர் (‘முத்தவக்கில்’) என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்.)
(என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையினால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்துவிட்டு விடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரின் உயிரைக் கைப்பற்றமாட்டான். மக்கள் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.
Volume :5 Book :65
எனக்கு முன்னர் உள்ள சமுதாயங்களில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கும், அவர்களது சமூகத்திலிருந்து (ஹவாரிய்யூன்கள்) தோழர்கள் இருந்தனர். அந்தத் தோழர்கள் அவரது வழிமுறைகளை பின்பற்றுவர், அவரது கட்டளையை நடைமுறைப்படுத்துவர். அவர்களுக்குப் பின் சமூகங்கள்,… அவர்களைத் தொடர்ந்து சமூகங்கள் வந்தன, அவர்கள் செய்யாதவற்றை அந்த சமூகங்கள் சொல்ல ஆரம்பித்தன, அவர்கள் சொல்லாதவற்றை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்டவர்களுடன் யார் தனது கரத்தால் போரிடுவாரோ அவர் முஃமினாவார், அவர்களுடன் தனது நாவால் போரிடுபவர் முஃமினாவார், அவர்களுடன் தனது உள்ளத்தால் போரிடுபவர் முஃமினாவார், இதற்குப் பின் ஈமானில் தாணிய வித்தளவவாது இல்லை” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம்).
நிச்சயமாக மார்க்கம் (இஸ்லாம்) பரதேசமான முறையில் ஆரம்பித்தது, அதே நிலையை மறுபடியும் அடையும். பரதேசிகளுக்கு சுப சோபனம் உண்டாகட்டுமாக! அவர்கள் யாரெனில் எனக்குப் பின் எனது வழிமுறைகளை விட்டும் சீர்கெட்டு இருந்தவர்களை சீராக்குபவர்கள் தான் அவர்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மில்ஹா தனது தந்தை, பாட்டன் வழியாக அறிவிக்கின்றார். திர்மிதி).
அல்லாஹ்வின் மீது சத்தியமாக (அலியே!) உன் மூலம் ஒருவருக்கு நேர்வழி கிடைப்பது என்பது செவ்வகை ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள். புஹாரி).
மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். தப்பு செய்யும் போது நடுநிலையில் சிந்திக்கும் ஆற்றலை மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான் .மனிதனை நேரான பாதையில் பயணிக்க அழைப்புப்பணி இன்றியமையாதது.
“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதைவிட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின் மீது திடமாக நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3:110)
மனிதன் தப்பு பண்ணும்போது அதை தடுக்கா விட்டால் அல்லாஹ்வின் தண்டனை எல்லோரையும் பாதிக்கும் .அழைப்புப்பணி அவசியமான பணியாகும். அது மார்க்கக் கடமை மட்டுமல்ல, இம்மையில் தவறுகளின் தீங்குகளிலிருந்து நம்மையும் , மனித சமூகத்தையும் காக்கும் பணியாகவும் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தனது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப இப்பணியில் பங்கேற்க வேண்டும். இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலம் இம்மை மறுமையில் பயன் பெறலாம்
அழைப்புப்பணி நம் அனைவருக்கும் கடமையான பொறுப்பு

No comments:

Post a Comment