Saturday, February 18, 2012

ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?


 


சென்னை: தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவன், ஆசிரியையை கொலை செய்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, போலீஸ் விசாரணையிலும், மாணவனின் நண்பர்கள் வட்டாரத்திலும், சேகரிக்கப்பட்ட தகவல் விவரமாவது:

வீட்டில் அதிக செல்லம்: மாணவனின் தந்தை, ஆந்திராவைச் சேர்ந்தவர். பல ஆண்டுக்கு முன் சென்னையில் குடியேறி விட்டார். அவருக்கு, மூன்று மகள்; ஒரு மகன். துறைமுகத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலில் உள்ளார். வசதியான குடும்பம். இரண்டு மகள்களுக்கு, திருமணம் ஆகிவிட்டது. கடைசி மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஒரே மகன் என்பதால், அதிக செல்லம். இதுவரை அவனது தந்தை, மகனை அடித்ததே இல்லை. பள்ளிக்கு எப்போதும் கார் மற்றும் பைக்கில் தான் செல்வான். தினமும் பாக்கெட் மணியாக, 100 ரூபாயை தந்தை கொடுத்தனுப்புவார். தொழிலில் கிடைக்கும் விலைஉயர்ந்த மொபைல்போன், கேமரா போன்ற பொருட்களை, மகனுக்கு கொடுப்பார். அவன், மற்ற மாணவர்களிடம் அதை காட்டி, பெருமை பேசுவான். மாணவனுக்கு பள்ளியில் மட்டுமல்லாது, மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவிலும், நண்பர்கள் அதிகம். வீட்டில் மாணவனுக்கு, தனியறையும் உண்டு. சகல வசதியுடன் வாழ்ந்த மாணவனுக்கு, படிப்பு மட்டும் கொஞ்சம் எட்டியே இருந்தது.
மூன்றாண்டுக்கு முன்பிருந்த பகை: ஒரே மகன், என்பதால் வீட்டில் அதிக செல்லத்துடன் வளர்க்கப்பட்டான். படிப்பு குறித்து, அவனது பெற்றோர் அதிக கவலை அடைந்தனர். பிளஸ் 2 முடித்துவிட்டால், அவனை வெளிநாட்டுக்குஅனுப்பி படிக்க வைக்க, தீர்மானித்து இருந்தனர். ஆனால், பள்ளியில் ஆசிரியர்களிடத்தில் மாணவனுக்கு தொடர்ந்து அவப்பெயரே ஏற்பட்டது. மாணவன் செய்யும் தவறுக்காக, வீட்டில் பெற்றோரை அழைத்து வரச் சொல்வதும், மாணவனோ, பெற்றோர் ஊரில் இல்லை என சொல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே பள்ளி முதல்வராக இருந்தவரிடம், ஆசிரியை புகார் தெரிவித்துள்ளார். ஆனால், மாணவனின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. புதிய முதல்வர் வந்ததும், மீண்டும் ஆசிரியை புகார் செய்துள்ளார்.

பெற்றோரிடம் புகார்: இது தொடர்பாக பெற்றோர் முகவரிக்கு, கடிதம் எழுதியும், மொபைலில் எஸ்.எம்.எஸ்., மூலமாகவும், ஆசிரியை புகார் அனுப்பியுள்ளார். மகன் சரியாகப் படிக்காமல், வேறு பாதையில் போவதை கண்ட பெற்றோர், மாணவனை அடித்ததோடு, தினமும் தரப்படும் பாக்கெட் மணியை, "கட்' செய்தனர். கார், பைக்கையும் திரும்ப வாங்கிக் கொண்டனர். பெற்றோரிடம் அடியும் வாங்கி, திட்டும் வாங்கியதோடு, அனுபவித்த வசதியும் போனதை நினைத்து, மாணவன் அவமானப்பட்டிருக்கிறான்.

கொலையைக் கற்றுக் கொடுத்த சினிமா: கொலை செய்யப்படுவதற்கு முன், "அக்னி பாத்' என்ற இந்திப் படத்தை, 30க்கும் மேற்பட்ட தடவை, மொபைலிலும், "சிடி'யிலும் பார்த்துள்ளான். அதில் வரும் கொலை காட்சியை கண்டு, ஆசிரியையின் மீதான வெறி அதிகமாகி, கொலை செய்யும் அளவுக்கு மாணவனை கொண்டு சென்றுள்ளது. சம்பவத்தன்று ஆசிரியை இந்தி பாடம் எடுக்க, வகுப்பறைக்கு சென்று விட்ட பிறகு, பாடம் ஆரம்பிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன், மாணவனும் வகுப்பறைக்குச் சென்றுள்ளான். தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து, ஆசிரியையிடம் கோபமாக பேசியதோடு, கண் இமைக்கும் நேரத்தில், கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளான். பெற்றோர், பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்தாலும் சரி, கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் சரி, தவறான பாதைக்கு செல்ல வழிவகுத்து விடுகிறது.

தகவல்: Dinamalar

No comments:

Post a Comment